வங்கி அதிகாரிகள் போல பேசி ரூ.3 கோடி மோசடி டெல்லியில் 3 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்

" alt="" aria-hidden="true" />

சென்னை,

 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் என கூறி, புதிய ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு தருவதாக சிலர் பேசுவார்கள். அப்போது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டு தெரிந்துகொண்டு அவர்களது கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துவந்தனர்.


 


அதுபோல வங்கி வாடிக்கையாளர்கள் பலரிடம் ரூ.3 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் குவிந்தன. கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 

3 பேர் கைது

 

விசாரணையில் டெல்லியை சேர்ந்த 3 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் டெல்லி சென்று தீபக் குமார் (வயது 20), தேவகுமார் (20) வில்சன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 3 பேரையும் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

 

அவர்கள் தமிழகம், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் இதுபோல் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.